தமிழகத்தில் ஒரு சதவீதம் கூட வாக்கு பெறாத சிறிய கட்சிதான் பாஜ கர்நாடகம் சென்று மேகதாது திட்டத்திற்கு எதிராக அண்ணாமலை போராட தயாரா?சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி பேட்டி

சேலம், : தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கர்நாடகம் சென்று மேகதாது திட்டத்திற்க எதிராக போராட தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி சேலத்தில் கூறினார்.பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் 40 டிஎம்சியில் இருந்து 120 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு 5 டிஎம்சி நீர் திருப்பி விட வேண்டும். கடந்த ஆட்சியில்,எடப்பாடி பழனிசாமி, உபநீர் திட்டத்ைத சிறிய அளவிலேயே தொடங்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.சேலம் உருக்காலைக்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் குறைந்த விலைக்கே கையகப்படுத்தப்பட்டது. நீண்ட காலமாக பயன்படுத்தாத நிலத்தை, நிலத்தின் உரிமையாளர்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். ஆனால், தனியாருக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரிங் ரோடு அமைக்க வேண்டும். கலைஞர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். சமூக நீதிக்காக பல போராட்டங்கள் நடத்தி, தமிழ்நாட்டிற்கு பல மாற்றங்களை கொண்டு வந்தவர். கலைஞரையும் ராமதாசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.ஆளுநருக்கும் முதல்வருக்கும் சுமுக உறவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நிர்வாகம் சீராக இருக்கும். குறிப்பாக, நீட் தேர்வு மசோதோ மத்திய அரசுக்கு சென்றுள்ளதா என தெரியவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். இந்தியாவில் பாஜ பெரிய கட்சி. தமிழகத்தில் வளர்ந்து வரும் சிறிய கட்சி. ஊரக தேர்தலில் ஒரு சதவீதம் கூட வாக்கு பெறவில்லை. திமுகவிற்கு பாஜ எதிர்க்கட்சி இல்லை. நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி. மேகதாது அணைக்கு எதிராக நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம்.கர்நாடகத்திலும்,மத்தியிலும் பாஜ ஆட்சிதான் நடக்கிறது. பாஜ தலைவர் அண்ணாமலை கர்நாடகம் சென்று மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக போராடுவாரா? இத்திட்டத்தை கொண்டு வர விடமாட்டோம் என அங்குபோய் சொல்வாரா? மேகதாது அணையை எக்காரணம் கொண்டும் கட்ட விடமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: