முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் பயன்பாட்டிற்கு வராமலே வீணாகி வரும் அரசு வணிக வளாக கட்டிடங்கள்-சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட அரசு வணிக வளாக கட்டிடங்களை அடுத்து வந்த ஆட்சியில் கண்டு கொள்ளாததால் கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகி வருவதாகவும், அதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு ஊராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். ஆலங்காடு கிராமம் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இவர்கள் பல்வேறு தேவைக்கு முத்துப்பேட்டைக்குதான் வரவேண்டும். அதனால் ஆலங்காடு கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைத்தெருவில் பொருட்களும் கிடக்கும் வகையிலும், அவைகள் குறைவான விலைக்கு பெரும் வகையிலும் ஒரு சந்தை உருவாக்கி தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய ஆலங்காடு திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சியில் கடைதெருவில் எஸ்ஜிஎஸ்ஒய் திட்டம் கிராம பகுதி சந்தை என்ற பெயரில் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் அன்றாடம் மீன்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் வணிகவளாக கட்டிடம், பொருட்களை சேமித்து வைதுள்ளக்கொள்ள குடோன், இதனை பராமரிக்கும் அதிகாரிகளின் அலுவலகம், வந்து செல்லும் மக்கள் வசதிக்கு பெரியளவிலான கழிப்பறை கட்டிடம் என அனைத்தும் அங்கு கட்டப்பட்டது. ஆனால் அடுத்து வந்த அதிமுக அரசு அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

இதனால் தற்போது வரை இந்த வணிகவளாக கட்டிடம் வெளியூர் செல்லும் மக்களுக்கு சைக்கிள் ஸ்டாண்டாகவும், அப்பகுதியினருக்கு தேவையற்ற பொருட்களை கொட்டி வைக்கும் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல் பின்புறம் இருக்கும் ஓப்பன் சிமென்ட் தளம் மதுஅருந்தும் பாராகவும், சமூக விரோதிகள் கூடும் ஒரு பகுதியாகவும் உள்ளது. அதேபோல் குடோன் மற்றும் அதில் அதிகாரிகள் தங்கும் கட்டிடம் பூட்டப்பட்ட நிலையில் வீணாகி வருகிறது. அதேபோல் கழிப்பறை கட்டிடம் கதவுகள் காணாமல் போய் அதன் பொருட்களும் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாதபடி உள்ளது. மொத்தத்தில் அந்த பகுதி முழுமையும் புதர் மண்டி கிடக்கிறது. இந்த வணிக வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் தன்னார்வ அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: