கழுத்தில் மாலை, நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் இறந்ததாக நினைத்த வாலிபர் திடீரென கண் விழித்தார்-செங்கம் பஸ் நிலையத்தில் பரபரப்பு

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சந்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடப்பதாக செங்கம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த உடலுக்கு மாலை அணிவிக்கப்பட்டும், நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டியும், இறந்தவர் உடலுக்கு செய்யும் மரியாதை செய்யப்பட்டிருந்தது.

அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, இறந்தவர்போல் கிடந்தவர் திடீரென முணுக ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அருகில் சென்று பார்த்தனர். அப்போது, அந்த வாலிபர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை எழுப்பி விசாரணை செய்தனர். அதில், கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சென்ராயன்(40) என்பது தெரியவந்தது.

மேலும், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயிலுக்கு மாலையுடன் சென்ற நிலையில், செங்கம் பகுதியில் மது அருந்தியதில் போதை அதிகமாகி பஸ் நிலையத்திலேயே படுத்துறங்கியது தெரியவந்தது. கழுத்தில் மாலையுடன் சடலம்போல் கிடந்த அவரது நெற்றியில் யாரோ விஷமிகள் ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்டி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தொழிலாளி சென்ராயனை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: