குன்னூர்: குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் புவியியல் துறையினர் நிலச்சரிவு பகுதி என அறிவித்த பகுதியில் விதி மீறி மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி இரவும் பகலுமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். குன்னூரில் கடந்த 2009ம் ஆண்டு பெய்த கன மழையில் மிகப்பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் காட்டேரி, மரப்பாலம், டபுள் ரோடு, பர்லியாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டது. குறிப்பாக காட்டேரி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டதில் அங்கிருந்த குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது.இதே போல் 2019 மற்றும் 2020ம் ஆண்டும் பெறும் சேதம் ஏற்பட்டது. பின்னர் தமிழக புவியியல் துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நிலச்சரிவு பகுதி என அறிவித்துள்ளது. இந்த பகுதியில் மண் அகற்றவும், பாறைகள் உடைக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு கட்டிடங்கள் கட்டவும், பட்டா வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை காலத்தில் இங்கு வசிக்கும் மக்களை சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த பகுதியில் தனியார் மூலம் விதிமீறி மண் மற்றும் பாறைகளை உடைத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்போதைய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்து பணிகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தது மட்டுமின்றி இது போன்ற பணிகள் மீண்டும் நடைபெற கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் தனியார் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் விதி மீறி பொக்லைன் உதவியுடன் மண் மற்றும் ராட்சத பாறைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ராஜேஷிடம் கேட்டபோது, குன்னூர் தாசில்தாரிடம் முறையான அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது குறித்து குன்னூர் தாசில்தார் சிவகுமாரிடம் கேட்டபோது, ‘‘அந்த பகுதியில் பாறை மற்றும் மண் அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை’’ என்று தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், ‘‘இந்த பகுதியில் பாறைகளை உடைக்கவும் மண் அகற்றவும் தனியார் நில உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு வந்தனர். ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தனியார் நிலத்தில் இரவும் பகலுமாக விதி மீறி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து குன்னூர் தாசில்தாரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே கலெக்டர் உடனடியாக இங்கு ஆய்வு செய்து பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மழைக்காலத்தில் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் போராட்டம் நடத்துவதாக திட்டமிட்டுள்ளோம். எனவே இது போன்று விதி மீறி செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.