அண்ணாமலை பல்கலை. விவகாரம் குறித்து யுஜிசியிடம் ஆளுநர் அறிவுறுத்த வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: அண்ணாமலை பல்கலை விவகாரம் குறித்து, யுஜிசியிடம் ஆளுநர் அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டையில் நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கலந்து கொண்டனர். முதன்முறையாக 22 முனைவர் பட்ட மாணவர்கள், 20 ஆய்வியல் நிறைஞர், 5661 முதுநிலை, 9964 இளநிலை, 260 முதுநிலை பட்டய, 3224 தொழில் பட்டய மற்றும் 212 பட்டயப்படிப்புகளுக்கும் என மொத்தம் 19,363 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: கல்வியும், சுகாதாரமும் எனது இருகண்கள் என முதல்வர் கூறியுள்ளார். குறிப்பாக கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதிலும் பெண் கல்விக்கு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர்கல்வியில் பெண்கல்வியை ஊக்கப்படுத்த ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் திராவிடமாடல். வருங்கால தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்கள், செய்முறை வழி கற்றல், வேலைவாய்ப்புகளுக்கு தேவையான திறன்களை வளர்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கி உயர்கல்வி மேம்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி என பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ‘நான் முதல்வன் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. அதை நோக்கி செயல்பட்டு வருகிறோம். பெருமைவாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் திறந்தநிலை கல்வியை பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரிக்க மறுக்கிறது. தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: 2 சகாப்தங்களாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்களும் இந்த கல்விமுறையால் பயன்பெறுகிறார்கள். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, தந்தை பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை கொண்டுவரப்பட்டது பாராட்டத்தக்கது. வாழ்வுமுறை வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் கற்றல், கற்பித்தல் முறைகளும் மாற வேண்டும். ஐஐடி மெட்ராஸ், திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து, கற்றல் பங்களிப்புடன் செயல்பட இருப்பது வரவேற்கதக்கது. பல்கலைகழகங்களுக்குச் செல்லும் போது பெண்கள் அதிக அளவில் பட்டம் பெறுவது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. இதுதான் ஒரு சமூகம் வேகமாக வளர்கிறது என்பதன் அறிகுறி.

பெண்கல்வி குடும்பம் மற்றும் நாட்டை வளப்படுத்துகிறது. இந்தியா முன்னேற பெண்கல்வி முக்கியமானது. தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் மேலோட்டமாக படித்துவிட்டு தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கையை அனைவரும் முழுமையாக படிக்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைக்கிறார். தேசிய கொள்கை இந்த அம்சங்களை கொண்டுள்ளது. தன்னம்பிக்கையுடன் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியா மக்களால் குறிப்பாக இளைஞர்களால் வழிநடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பை தேடி அலையும் நிலையை விடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.

Related Stories: