கடந்த ஆட்சி காலத்தில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பண்ணை மேம்பாட்டு பணிகள் மீண்டும் விவசாயிகள் மூலம் மேற்கொள்ள முடிவு: நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மட்டுமே டெண்டர் எடுக்க அனுமதி

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பண்ணை மேம்பாட்டு பணிகளை மீண்டும் விவசாயிகளை வைத்து மேற்கொள்ள நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. பிரதம மந்திரி வேளாண்மை பாசன திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் என்ற அடிப்படையில் பண்ணை மேம்பாட்டு பணிகள் என்கிற உப திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆட்சிகாலத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தவில்லை.

இதனால், அந்த சங்கம் சார்பில் இப்பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், கடந்த ஆட்சி காலத்தில் நீர்வளத்துறை சார்பில் ஒப்பந்த நிறுவனம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதாவது விவசாயிகள் செய்து வந்த இப்பணிகள் ஒப்பந்த நிறுவனம் மூலம் செய்தது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் நடந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், பாசன கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், விவசாயிகளின் பங்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொண்டு, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், தற்போது, மாநிலம் முழுவதும் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின் மூலம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் பண்ணை மேம்பாட்டு பணிகளை மீண்டும் விவசாயிகள் மூலம் மேற்கொள்ள நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, ரூ.79.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு பண்ணை மேம்பாட்டு பணிகளுக்கு டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த டெண்டரில், நீரினை பயன்படுத்துவோர் சங்கமே பங்கேற்கலாம் என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: