கோவா, ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் 2 இந்திய பேராயர்கள் கார்டினலாக நியமனம்: வாடிகனில் போப் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த 2 கத்தோலிக்க பேராயர்களை கார்டினல்களாக போப்பாண்டவர் நியமனம் செய்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையில் போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் பதவி வகிப்பவர்கள் கார்டினல்கள். இவர்களில் இருந்து ஒருவரே புதிய போப்பாண்டவராக தேர்வு செய்யப்படுகிறார். கார்டினல்களில் அதிகமான வாக்குகள் பெறுகிறவர்தான் புதிய போப்பாண்டவராக முடியும். கத்தோலிக்க திருச்சபையின் விதிகளின்படி 120 பேர் கார்டினல்களாக பதவி வகிப்பார்கள்.

இந்நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேரை  கார்டினல்களாக நியமித்து போப்பாண்டவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதன்படி, கோவா பேராயர் பிலிப் நெரி அன்டோனியோ செபஸ்டோ டி ரோசாரியோ பெராவ், ஐதராபாத் பேராயர் அந்தோணி பூலா ஆகிய இருவரும் கார்டினல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘கோவா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து முதல் முறையாக 2 பேராயர்கள் கார்டினல்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கார்டினல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்படி செய்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து ஒருவர் போப்பாண்டவராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே, போப்பாண்டவர் ஆலோசனை குழுவில் கார்டினல் ஓஸ்வால்ட் கிராசியாஸ் உள்ளார். தற்போது, மேலும் இருவர் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,’ என்று தெரிவித்தார். இந்தியாவை சேர்ந்த 2 பேர் மட்டுமின்றி, மங்கோலியா, கானா, நைஜீரியா, சிங்கப்பூர், கிழக்கு தைமூர், பராகுவே, பிரேசில், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் கார்டினல்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வாடிகனில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் இந்த பதவியை ஏற்க உள்ளனர்.

Related Stories: