மதவாத நச்சு விதைகளை தூவிட எத்தனிப்பவர்களிடம் இருந்து தமிழகத்தை காப்போம் கலைஞர் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: கலைஞர் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவோம்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று, தந்தை பெரியாரிடம் கற்றுத் தெளிந்த லட்சியப் பிடிப்பின் அடிப்படையில், தன்னை தமிழ் உலகிற்கு பிரகடனப்படுத்திக் கொண்ட கொள்கைச் சிகரமாம் “தமிழின தலைவர்” கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி, அவரது மங்காப் பெரும்புகழ் அவனியில் என்றும் பரவி, எப்போதும் நிலைத்திடும் வகையில், அவர் நாள்தோறும் சிந்தித்து சிந்தித்து பொலிவும் வலிவும் கூட்டிப் ‘‘புதிய தலைமைச் செயலக கட்டிடம்” கட்டிய ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தமிழக அரசின் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்த பெருமைமிகு நிகழ்வுக்கு மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம், நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து; ஆறாம் முறையாக திமுக ஆட்சி அமைந்திடவும், ஆருயிர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவச் சிலையை அரசின் சார்பில் நிறுவிடவும், இந்திய மாநிலங்களின் முதல்வர்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள முதல்வராக மிக உயர்ந்து நிற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, பாராட்டுகளை தெரிவித்து, கூட்டம்  மகிழ்ச்சி அடைகிறது.

“தமிழின தலைவர்” கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ம் நாள், தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம்பெறத்தக்க வகையில், அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்ட திமுக தலைவரும், தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு, திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நன்றி நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. கலைஞரின் பிறந்தநாளையொட்டி, மாவட்ட கழகங்கள் தொடங்கி ஒன்றிய - நகர-பேரூர்-பகுதி-வட்ட-கிளைக் கழகங்கள் வரை, அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, கழக கொடியேற்று விழாவையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்துவது என கூட்டம் தீர்மானிக்கிறது.

‘‘என் உயரம் எனக்கு தெரியும்‘’ என்று பொதுவாழ்வுக்குரிய தன்னடக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, இந்திய அரசியலில் இமயம் போல் உயர்ந்து நிமிர்ந்து நின்று, தமிழகத்ைத 19 ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து, தமிழகத்தை நயமாகச் செதுக்கிய ‘நவீனத் தமிழகத்தின் தந்தையாக’ திகழ்ந்தவர். அடுத்த ஆண்டு (2023) நூற்றாண்டு விழா காணவிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரையும்; அவர் உயிரென எண்ணிக் கட்டிக் காத்த இயக்கத்தின் கொள்கைகளையும், அவர் வழியில் “திராவிட மாடல்” ஆட்சி நடத்தி, ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் தமிழகத்தை தலைநிமிர செய்துள்ள திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளையும், இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்திடும் வகையில், மாநிலம் முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோர், தங்கள் அயராத உழைப்பாலும், தமது குருதி-வியர்வையை கொட்டியும், பண்படுத்தி வைத்துள்ள தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்; மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத-அபாயகர சக்திகளையும், அவர்களுக்கு துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி, முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அரணாக நிற்க வகை செய்வோம் என மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: