சேலம் ஆயுதப்படையில் பெண்போலீசாரின் குழந்தைகளை கவனிப்பதற்கு பாதுகாப்பு மையம்-போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்

சேலம் :  சேலம் மாநகர காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் 73 பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சிலர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ளும் வகையில் சேலம் ஆயுதப்படை அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1வயது முதல் 5வயது வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படும். காலையில் 8மணிக்கு விட்டு செல்லவேண்டும். மாலை 5மணிக்குள் குழந்தைகளை அழைத்து செல்லலாம். குழந்தைகள் விளையாடும் வகையில் பொம்மைகள் மற்றும் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை இரண்டு காவலர்கள் கவனித்து கொள்வர். மேலும் ஒரு ஆயா நியமிக்கப்பட்டுள்ளார். பால், பருப்பு,சாதம் குழந்தைகளுக்கு அங்கேயே சமைத்து கொடுக்கப்படும். பெற்றோர் கொடுக்கும் தின்பண்டமும், உணவும் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோதா திறந்து வைத்தார். துணை கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி, கூடுதல் துணை கமிஷனர் கும்மராஜா, உதவி கமிஷனர்கள் சரவணன், அசோகன், ஆயுதப்படை உதவி கமிஷனர் எட்டியப்பன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: