மில்லிங் செய்யாமல் சாலை அமைத்த நிர்வாக பொறியாளர் மாற்றம்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பர்மா நகர் பகுதியில் முறையாக மில்லிங் செய்யாமல் சாலை போடப்பட்ட விவகாரத்தில் நிர்வாக பொறியாளரை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை மாநகராட்சி மண்டலம் 2ன் (மணலி) நிர்வாக பொறியாளர் ஜி.ராதாகிருஷ்ணன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மழைநீர் வடிகால் துறையின் துணை நிர்வாக பொறியாளர் தேவேந்திரன் மண்டலம் 2ன் நிர்வாக பொறியாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். நிர்வாக பொறியாளர் ஜி.ராதாகிருஷ்ணன் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருந்து பணியை தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 2ம் மண்டலத்திற்கு உட்பட்ட வடசென்னை பகுதி பர்மா நகரில் முறையாக மில்லிங் செய்யாமல் சாலை போடப்பட்ட விவகாரத்தில் அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு நிர்வாக பொறியாளர் மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories: