இதுவரை 2,600 கோடி மதிப்பு கோயில் சொத்துகள் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ரூ.2,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 186 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு  குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி செலவில் 1500 கோயில்களில் திருப்பணிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடமுழுக்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 3 மாத காலங்களில் நிலுவையில் இருந்த வாடகைகளை வசூல் செய்ததில் ரூ.186 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் வரையில் ரூ.2,600 கோடி மதிப்பிலான சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் 100 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பேசிய கருத்துகளை  பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து  பேசியுள்ளார். மிரட்டல்களை எல்லாம் கடந்து வளர்ந்த இயக்கம் திமுக. இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சருக்கும் இல்லாத துணிவு,  தன்மானம், திராணி, தெம்பு தமிழக முதல்வருக்கு உள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி வழங்குங்கள் என கேட்டால் அது தவறா, நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என கோரிக்கை வைப்பது தவறா.  எதை வேண்டுமானாலும் அவர்கள் கூறட்டும். அதை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: