கோடை விழா மலர் கண்காட்சியை காண ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க, நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் முன்பு குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான ஏற்காட்டில் 45வது கோடை விழா மலர்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. அங்குள்ள அண்ணாபூங்காவில் லட்சக்கணக்கான மலர்களை கொண்டு அலங்கார வளைவுகள், மலர் உருவங்கள், மாம்பழ கண்காட்சி, காய்கறிகளால் ஆன உருவங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதனை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். படகு இலத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர்.

இதேபோல், அண்ணாபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்கண்காட்சியை கண்டு ரசித்தனர். மேலும், அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை, அரசு பேருந்து, பட்டாம்பூச்சி செல்பி பாயிண்ட், வள்ளூவர் கோட்டம், மீண்டும் மஞ்சள் பை, மாட்டுவண்டி மற்றும் சின்சான் ஆகிய உருவங்கள் முன்பும், பூந்தொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரங்கு மற்றும் நீரூற்று முன்பும் தனித்தனியாகவும், குடும்பத்துடனும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால், ஏற்காடு மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா என அனைத்து சுற்றுலா இடங்களும் களைகட்டியது. முன்னதாக, சேலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஏற்காடு செல்லும் மலைப்பாதையில், திடீர் சிறு அருவிகள் உருவாகியுள்ளனர். ஏற்காட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவற்றின் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

கோடை விழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது. மேலும், தெருக்கூத்து, இன்னிசை மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை பெண்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடக்கிறது.

Related Stories: