மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. திமுக ,அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. திமுக கூட்டனியில் இருக்கும் காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அதை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 12 பேர் தங்களது டெல்லி செல்வாக்கை வைத்து, அந்த ஒற்றை இடத்தை பெறுவதற்கு கட்சி தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘மாநிலங்களவை உறுப்பினர் பதவி ப.சிதம்பரத்திற்கு கட்சி தலைமை ஒதுக்கலாம்’ என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இதையடுத்து, ப.சிதம்பரத்திற்கு தான் மாநிலங்களவை சீட் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், கடந்த 5 நாட்களாக கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டு வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் சோனியாவை கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரங்கள், கட்சியில் இருக்கும் சூழல்கள் ஆகியவை குறித்து பேசியதாக தெரிகிறது. குறிப்பாக ஒரு மாநிலங்களவை இடத்தை தனக்கு வழங்க வேண்டும் என முக்கிய கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கிடையே, ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி ஆகிய இருவருக்கும் எதிராக ராகுல் காந்தியின் இ-மெயிலுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: