காஞ்சிபுரத்தில் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்: வைகுண்ட பெருமாள் கோயிலில் பிரமோற்சவ பிரகடன பெருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் பிரமோற்சவ பிரகடன பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வைகுண்ட வல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ பிரகடன பெருவிழா  நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு கொடியேற்றத்துடன் இன்று விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு வைகுண்ட பெருமாள், வைகுண்ட வல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து  அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இரவு சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வருகிறார்.  நாளை 2வது நாள் அம்ச வாகனம், சூரிய பிரபை ஆகிய வாகனங்களில் உலா வந்து காட்சி அளிக்கிறார். 3வது நாள் கருட சேவை நடக்கிறது.அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில்  பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து அருள் பாலிக்கிறார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, மோகினி அவதாரம், யாளி வாகனம், யானை வாகனம், எடுப்புதேர், பல்லக்கு, வெண்ணைத்தாழி, குதிரை வாகனம், பல்லக்கு தீர்த்தவாரி, புண்ணியகோட்டி விமானம், சப்தாவரணம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இறுதியாக புஷ்ப பல்லக்கில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பூவழகி, விழாக்குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: