இலங்கையில் பணவீக்கம் 35 சதவீதத்தை எட்டியது; ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அச்சிட முடிவு.! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தகவல்

கொழும்பு: இலங்கையில் பணவீக்கம் 35 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்ற பின்னரும், பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டின் பணவீக்கம் 35 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் 40 சதவீதத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. கடந்த மார்ச்சில் 21.5 சதவீதம், ஏப்ரலில் 33.8 சதவீதம் என பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், உற்பத்தி தொழில்கள் முடங்கி விட்டதால் மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில், ‘பணவீக்கத்தை சமாளிக்க ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போது அவர் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இலங்கையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘அரசிடமும் பணம் இல்லை. மக்களிடமும் பணம் இல்லை. இதனால் எங்களுக்கு வேறு வழியில்லை. புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம். ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால்தான் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியும். ஆனால் மக்கள் இந்தப் பணத்தை உற்பத்திக்காக செலவு செய்ய வேண்டும். அதை விடுத்து நுகர்வுக்காக செலவிட்டால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். அதன்பிறகு மீளவே முடியாத நிலைக்கு சென்று விடுவோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். புதிய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக உள்ளது.

உட்கட்டமைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, 2 ஆண்டு கால நிவாரண திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய பட்ஜெட் இருக்கும்’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘‘பணவீக்கம் 35 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், மேலும் புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது என்பது மிகவும் தவறான முடிவு. புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் மேலும் பணவீக்கம் அதிகரிக்கும். மக்கள் கைகளில் ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும்பட்சத்தில், அவற்றின் விலை மேலும் மேலும் உயரும்’’ என்று இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: