11 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் கத்திரி வெயில் முடிய உள்ளது. இந்நிலையில், கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாகவும்  வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தெனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

நத்தம் பகுதியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. அரியலூர் 60மிமீ, செட்டிக்குளம் 40மிமீ, அரிமளம், திருமயம், கல்லந்திரி 30மிமீ, திருப்புவனம், ஈரோடு, லப்பைக்குடிக்காடு, புதுக்கோட்டை, கலவாய் 20மிமீ, பெருஞ்சாணி அணை, விருதுநகர், கோவில்பட்டி, செந்துறை, ஆண்டிப்பட்டி, கொடைக்கானல், மதுரை விமான நிலையம், சிவலோகம், பெரம்பலூர் 10மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர சென்னை புறநகரில் நேற்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகப் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று 11 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னை, கடலூர், கரூர்,ம துரை மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய இ டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: