சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வந்த மினி டெம்போ, லாரி மீது மோதல்: தந்தை, மகன் உட்பட 4 பேர் பலி: 3 பேர் படுகாயம்

சிதம்பரம்: சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது மினி டெம்போ மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த டைல்ஸ் வியாபாரி, அவரது மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (38). இவர் அப்பகுதியில் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்தில் தனது உறவினர் வீடு கட்டுவதற்காக டைல்ஸ் மற்றும் மின் சாதனப் பொருட்களை ஒரு மினி டெம்போவில் ஏற்றிக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டார்.  

சேலத்தைச் சேர்ந்த டிரைவர் நகுலேஸ்வரன் (25) டெம்போவை ஓட்டிவந்தார். இந்த மினி டெம்போவில் செல்வகுமார், அவரது மனைவியின் தங்கை கற்பகவள்ளி (27), செல்வகுமாரின் மகன் மிதுன் (3) ஆகியோர் வாகனத்தின் முன்புறம் உட்கார்ந்து இருந்தனர். வாகனத்தின் பின்புறம் சிவக்குமார் (34), கருப்புசாமி(34), பெருமாள் (42) ஆகிய 3 பேரும் பயணித்தனர். இந்த மினி டெம்போ இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள கூத்தன்கோயில் என்ற இடத்தின் அருகே வந்தது.

அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஜல்லி ஏற்றிய லாரியின் பின்புறம் பயங்கரமாக  மோதியது. மோதிய வேகத்தில் மினிடெம்போவின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் முன்பக்கத்தில் பயணம் செய்த செல்வகுமார், அவரது மனைவியின் தங்கை கற்பகவள்ளி, செல்வகுமார் மகன் மிதுன் மற்றும் டெம்போ ஓட்டுநர் நகுலேஸ்வரன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகுமார், கருப்புசாமி, பெருமாள் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் இறந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மினிடெம்போ டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிதம்பரம் புறவழிச்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: