இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்திய வழக்கு இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  சென்னையில் வெடிகுண்டு கடத்தல் நடக்கவுள்ளதாக கடந்த 2007 ஜனவரி 23ம் தேதி உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சென்னை பெரியமேட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் இலங்கைக்கு 2 டன் இரும்பு குண்டுகளை கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கடத்தலில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த சிவகரன், வேலுசாமி, கிரிதரன், முத்து, கருணாகரன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் இரும்பு குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

  அவர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடியில் இருந்து கடத்த இருந்த 60 மூட்டை இரும்பு பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. சென்னை ஜெகன் டிராவல் ஏஜென்சியில் இருந்தும் 50 மூட்டை பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் மீது வெடிபொருள் தடுப்பு சட்ட பிரிவு, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி சாட்சிகளை விசாரித்தார். வழக்கு நடந்த காலகட்டத்தில் 7 பேர் தலைமறைவாகி விட்டனர். ஒருவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து, மீதம் இருந்த சிவகரன், வேலுசாமி, கிரிதரன், முத்து, கருணாகரன் ஆகியோர் மீதான வழக்கு மட்டும் பிரித்து விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சிவகரன், முத்து ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற 3 பேருக்கு தலா ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: