31,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை

* முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா

* பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்

சென்னை: தமிழகத்தில் ₹31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில்  ₹31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக  பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதற்காக நாளை மாலை 3.55 மணியளவில்  ஐதராபாத்தில் உள்ள பெகும்பெட் விமான நிலையத்தில் இருந்து இந்திய  விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் சென்னை வருகிறார். சரியாக 5.10  மணியளவில் அவர் சென்னை விமானநிலையம் வந்தடைகிறார். விமானநிலையத்தில்,  கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர்  மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரை  பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல்  அருகே உள்ள கடற்படை தளத்துக்கு செல்கிறார். பிறகு பாதுகாப்புடன்  காரில் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார். அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில்  பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெறும் விழாவில் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பின்னர், அங்கிருந்து இரவு 7.05  மணியளவில் காரில் புறப்பட்டு 7.35 மணியளவில் சென்னை விமான நிலையத்தை  வந்தடைகிறார். 7.40 மணியளவில் இந்திய விமான படைக்கு சொந்தமான  விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்வார். 10.25 மணியளவில் அவர் டெல்லி  வந்தடைவார். பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை விமான  நிலையம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை 5 அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை வரும்  பிரதமர் மோடி என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்ற பட்டியல்  வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை-தேனி இடையில் ₹500 கோடி மதிப்பில் 75  கிலோ மீட்டர் இடையிலான ரயில்வே திட்டம், தாம்பரம்- செங்கல்பட்டு இடையே  ₹590 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் எண்ணூர்-செங்கல்பட்டு இடையே 115 கிலோ மீட்டர் தொலைவில் ₹850 கோடி மதிப்பிலும்,  திருவள்ளூர்-பெங்களூரு இடையே 271 கிலோ மீட்டர் தொலைவில் ₹910 கோடி  மதிப்பிலும் இயற்கை எரிவாயு குழாய் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா  திட்டத்தின் கீழ் சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் ₹116 கோடி மதிப்பில்  1152 வீட்டு மனைகள் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைக்கிறார். மொத்தம் ₹2,900 கோடி மதிப்பிலான இந்த 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பெங்களூரு-சென்னை  இடையே ₹14,870 கோடியில் 262 கிலோ மீட்டர் அளவில் பறக்கும் சாலை  திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மூலம்  பெங்களூரு-சென்னை இடையில் 2 முதல் 3 மணி நேரம் வரையில் பயண நேரம்  மிச்சமாகும். மதுரவாயல் - துறைமுகம் இடையே 21 கி.மீ தொலைவில் ஈரடுக்கு  மேம்பாலம் ₹5850 கோடி மதிப்பிலான திட்டம், நேரலூர் - தர்மபுரி இடையே 94  கி.மீ தொலைவில் நான்குவழிச்சாலை திட்டம் ₹3870 கோடி மதிப்பிலும்,  மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே 31 கி.மீ தொலைவில் இரண்டு வழிச்சாலை திட்டம் ₹720  கோடி மதிப்பிலும் என மொத்தம் ₹28,500 கோடி கட்டப்பட உள்ள 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சென்னை  எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய  பகுதிகளில் ₹1800 கோடி மதிப்பில் 5 ரயில்நிலையங்களை நவீனப்படுத்துவதற்கான  திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் ₹1,400 கோடி மதிப்பில்  பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ₹31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர்,  பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார்.  அப்போது, இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து, தமிழகத்திற்கு  தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய  மனுவையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: