சென்னை, திருவள்ளூர் உட்பட 26 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் இருந்து 3.41 கோடி ரொக்கம் பறிமுதல்

* 1 லட்சத்துக்கு 36,000 மாத வட்டி தருவதாக மோசடி

* இயக்குனர்கள் 2 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை,  திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ₹3.41 கோடி ரொக்கம், 60 சவரன் நகை உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நிறுவன இயக்குனர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன தலைமையகம் உள்ளது. இதன் உரிமையாளர் பி.ராஜசேகரன். ஆருத்ரா கோல்டு நிதி  நிறுவனத்திற்கு திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட தமிழகம் முழுவதும்  26க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. சென்னையில் அமைந்தகரை, வில்லிவாக்கம், ஜே.ஜே.நகரிலும் உள்ளது.

இந்நிலையில் இந்த நிதிநிறுவனம்  பெயரில் வெளியான விளம்பரத்தில், எங்கள் நிதி நிறுவனத்தில் ₹1 லட்சம்  முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கடந்த மே 6ம் தேதி ஆரணி அருகே சேவூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும்  விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் சார்பில் கிளை ஒன்று திடீரென  தொடங்கப்பட்டுள்ளது. அந்த  கிளை திறப்பு விளம்பரத்தில் அறிவித்தப்படி ₹1  லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ₹36 ஆயிரம் வட்டி அளிப்பதாக  கூறி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. .இந்நிலையில், பொதுமக்களில் சிலர்  சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினருக்கும், வருவாய்த்  துறையினருக்கும் புகார் அளித்தனர். அதன்படி ஆரணி அருகே உள்ள சேவூர்  பகுதியில் இயங்கி வரும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன அலுவலகத்தில் காவல்  துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சேவூர்  கிளையில் மட்டும் ₹1.50 கோடிக்கு மேல் பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில்  முதலீடு செய்து இருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து கிளை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கவனத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள்  கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு  நிதி நிறுவனத்தின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சந்தேகத்தின் அடிப்படையில்  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அதாவது, அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கோல்டு நிதி  நிறுவனத்திற்கு சொந்தமான திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட தமிழகம்  முழுவதும் 26க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்  நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.இந்த சோதனையில்  பொருளாதார குற்றப்பிரிவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்  ஈடுபட்டனர். எந்த அடிப்படையில் ₹1 லட்சம் முதலீடுக்கு மாதம் ₹36 ஆயிரம்  வட்டி கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. பொதுமக்களை  ஏமாற்றும் நோக்கில் மோசடியாக பணம் பெற விளம்பரம் செய்யப்பட்டதா என நிதி  நிறுவன உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளிடம் பொருளாதார குற்றப்பிரிவு  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆருத்ரா கோல்டு நிதி  நிறுவனத்தில் இதுவரை எவ்வளவு பேர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், விளம்பரம் செய்தபடி பொதுமக்களுக்கு வட்டியோ, பணமோ வழங்கவில்லை. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ₹3.41 கோடி ரொக்கம், 60 சவரன் நகை, 44 செல்போன்கள், 6 லேப்டாப்புகள், 48 கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், நிதிநிறுவனத்தின் 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. விசாரணையை ெதாடர்ந்து மோசடிக்கு முகாந்திரம் இருந்ததால், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ள ேமாகன்பாபு, பாஸ்கரன், உஷா, ஹரிஷ் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி, கூட்டுச்சதி 5க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இயக்குனர்கள் மோகன்பாபு, பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர், இயக்குனர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

முதலீட்டாளர்கள் புகார் தரலாம்

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிக்கு நேரிலோ அல்லது eowtn7of2022@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: