வெப்பச் சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச் சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பச் சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மே 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்றும் நாளையும் அரபிக்கடலின் தென்கிழக்கு, லட்சத்தீவு, தென் கேரளா பகுதிகளிலும் சூறாவளி வீசக்கூடும். மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாட்டின் கரையோர பகுதி, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியிலும் பலத்த சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசவுள்ளதால் மீனவர்களுக்கு இன்றும், நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: