பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதிமொழியே உண்மையான தீர்வை தரும்: ஒன்றிய அரசு நாடகமாடுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதி மொழி தான் உண்மையான தீர்வை தரும் என்றும், இதில் ஒன்றிய அரசு நாடகமாடுகிறது என்று கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10க்கும் அதிகமாக உயர்த்திவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ தாண்டிய நிலையில், அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும்.

அதேபோல, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டும் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2015ல் ரூ.435-க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது ரூ.1,000ஐ தாண்டிவிட்டது. அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும். எரிபொருட்கள் விலையைக் குறைக்காவிட்டால், பணவீக்கம், விலைவாசி உயர்வை மறைக்க ஒன்றிய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: