கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையும் பழுது 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: சென்னை அடுத்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு மாநிலங்களின் தேவைக்கேற்ப மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள, முதலாவது அணு உலை கடந்த 2018ம் ஆண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால், 2வது அணு உலை மட்டுமே இயங்கி வந்தது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2வது அணு உலையும் நேற்று இயங்கவில்லை. இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரு அணு உலைகளும் இயங்காத நிலையில், மத்திய தொகுப்பிற்கு கிடைக்கப்பெற வேண்டிய 440 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. கல்பாக்கத்தில், அணுமின் நிலையம் அமைக்கப்பட்ட 37 ஆண்டில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு அணு உலை என அதன் உற்பத்தியை அணுமின் நிலைய நிர்வாகமே நிறுத்தம் செய்து பராமரிப்பு பணி மேற்கொண்டு சில தினங்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தியை தொடங்கிவிடும்.

சில நேரங்களில் இரு அணு உலைகளில் ஏதாவது ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுவிடும். அதை அணுமின் நிலைய விஞ்ஞானி மற்றும் பொறியாளர்களை கொண்டு பழுது நீக்கி சில தினங்களில் நிர்வாகம் மின் உற்பத்தியை துவங்கும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2018 ஜனவரி மாதம் முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு என்று அணுமின் நிலைய அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறே என்றாலும் சில நாட்களிலேயே சரி செய்யப்படும். ஆனால், இன்று வரை முதலாவது அணு உலை பழுது நீக்கம் செய்யப்படாமல் இருப்பது அணு உலையில் ஏதோ பெரிய கோளாறோ என்ற அச்சம் சுற்றுப்புற மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே, புதிதாக ஒரு அணு உலை கட்டப்பட்டு வருகிறது என்ற தகவல் அப்பகுதி மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Related Stories: