தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை சரிகிறது-விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது.தேங்காயிலிருந்து பிரித்து உற்பத்தி செய்யும் கொப்பரைகளை, ஒழுங்குமுறை விற்பனைகூட நிலையங்களிலும், வெளி மார்க்கெட்டிலும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதில், ஆனைமலை உள்ளிட்ட ஒரு சில  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வாரந்தேறும் விவசாயிகள் கொண்டுவரும் கொப்பரை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு தரம்  பிரித்து ஏலம் விடப்படுகிறது.

இதை வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கின்றனர்.

ஆனால், சிலநேரங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு கொப்பரைக்கான உரிய விலை இல்லாததால், வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், முதல் தர கொப்பரை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.105 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.95 வரை இருந்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால்,வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரியத் துவங்கியது. வெளிமார்க்கெட்டில் கொப்பரைக்கு உரிய விலை இல்லாததால், அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் விசாயிகள் கொண்டுவரும் கொப்பரை விலை குறைய துவங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.35 வரை இருந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.25வரையே விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால் அதன் விலை சரிவடைந்தது. தற்போது ஒரு கிலோ கொப்பரை முதல்  தரம் அதிகபட்சமாக ரூ.90 வரையிலும், இரண்டாம் தரை ரூ.72 வரை என குறைவான விலைக்கு போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: