சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞரின் முழுஉருவ சிலையை துணை ஜனாதிபதி 28ம் தேதி திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் முழுஉருவ சிலையை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், வருகிற 28ம் தேதி மாலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையுரையாற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், ‘கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்’ என்று தெரிவித்தார். அதன்படி ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞருக்கு சிலை அமைக்கும் பணி தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 16 அடியில் தயாராகும் சிலை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை மீஞ்சூர் புதுப்பேடு பகுதியில்  தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அண்ணாசாலை நோக்கி அமைகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் சிலை திறப்பு விழா வருகிற 28ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து மாலை 5.45 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.

இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழா பேரூரையாற்றுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். விழாவில் கலைஞர் பற்றிய சிறப்பு காணொலி தொகுப்பு ஒளிபரப்பப்படுகிறது. நிறைவாக தலைமை செயலாளர் இறையன்பு நன்றி கூறுகிறார். விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: