மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100 முதல் 110க்கு விற்பனை; இல்லத்தரசிகள் வேதனை

சென்னை: மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக, தக்காளி விலை ‘கிடுகிடு’ வென அதிகரித்துள்ளது. ஏற்கனவே, வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளை மேலும்  வேதனை அடைய செய்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் உள்பட ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் லாரி, மினிவேன் போன்ற வாகனங்களில் தக்காளி, வெங்காயம், கத்திரி, கேரட் போன்ற காய்கறிகள் வருகின்றன.

இந்நிலையில், வழக்கத்தைவிட நேற்று காலை குறைவான அளவே தக்காளி வந்தது. அதாவது, தினமும் 90 வாகனங்களில் 1,200 டன் தக்காளி வரும். ஆனால், மேற்கண்ட பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் வரத்து குறைவால் நேற்று காலை 38 வாகனங்களில் 500 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால், அதன் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்,  ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.70க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.100க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.110க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், சென்னை புறநகரில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110க்கும் பெங்களூரூ தக்காளி ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நீடிக்கும்’’ என்றார். தக்காளி விலையேற்றம் இல்லத்தரசிகளை மிகுந்த வேதனைஅடைய செய்துள்ளது. ஏற்கனவே, சிலிண்டர் விலை, எண்ணெய் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: