நெடுஞ்சாலை பணிகளில் குறைபாடுகளை களையும் வகையில் சென்னையில் சாலை, வடிகால் பணிகளை உள்தணிக்கை குழு திடீர் ஆய்வு: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவால் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னையில் நடந்து வரும் சாலை, வடிகால் பணிகளை உள்தணிக்கை குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய உள் தணிக்கை  என்ற புதிய நடைமுறை நெடுஞ்சாலைத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தணிக்கையை மேற்பார்வையிட  கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 4 உதவி கோட்ட பொறியாளர்கள், 8 உதவி பொறியாளர்கள் இடம்பெறுகின்றனர்.

இந்த குழு சாலை பணிகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்கிறது. தேவைப்பட்டால் இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் உள்தணிக்கை செய்து, அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை, வடிகால் மற்றும் பாலப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையின் பெருநகர சென்னை அலகு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செல்லத்துரை தலைமையிலான பொறியாளர்கள் குழு உள் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த குழுவினர், ஜிஎஸ்டி சாலை, ஜவஹர்லால் நேரு சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளையும், பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய வடிகால் பணிகளின் தரத்தையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: