பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.  சர்வதேச கச்சா எண்ணெய் விலையையொட்டியே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. ரஷ்யா- உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. இதையடுத்து, சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலைகள் எகிறியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 12 கேஸ் சிலண்டர்களுக்கு தலா ரூ200 மானியம் வழங்கப்படும் என்றும் நாட்டில் சிமெண்ட் விலையை குறைக்கவும் சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும். சில உருக்கு மூகப்பொருட்களின் இறக்குமதி வரியும் குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர்  பதிவிட்டுள்ளார். சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை தாண்டியது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Related Stories: