பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2021 வடகிழக்கு பருவமழை காலத்தில் கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை கடைகள் மூலம் 27.11.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1100 மெட்ரிக் டன் அளவிற்கும் ரூ4 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ₹45 முதல் ரூ55 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ90 முதல் ரூ120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்திவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக 19ம் தேதி 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ₹70 முதல் ₹85 வரை விற்பனை செய்யப்பட்டது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: