31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை கொச்சையாக விமர்சிப்பதா?...எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை  சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை - அதற்காகப் பாடுபட்ட திமுக அரசின்  நடவடிக்கைகளைக் கேலிக்கூத்து என்று விமர்சிப்பது வெட்கக்கேடானது. ஒரு  பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு துளியும் பொருத்தமில்லாதது  என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

 31 வருடங்கள் சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலையை கேலிக்கூத்து என்று கூறி - மனிதாபிமானமின்றி, மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். ஒட்டுமொத்தத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உணர்வினைக் கொச்சைப்படுத்தி அவர் இப்படி பேசியிருப்பது வேதனையளிக்கிறது.

  அதிமுக ஆட்சியில் 7 பேர் விடுதலை குறித்து - தீர்ப்பு வெளிவந்த மறுநாள் 19.2.2014 முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் கலைஞர் முதல்வராக இருந்தபோது - அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குள்ளேயே நிவாரணம் பெற்றுத் தந்தவர். நளினியின் தூக்குத்தண்டனையை 2000ம் ஆண்டே ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவு பெற்றுத்தந்தவர் கலைஞர். எனவே கலைஞர் தலைமையிலான திமுக அரசின் சட்ட ஞானம்- துணிச்சல் பற்றியெல்லாம் கொல்லைப்புறம் வழியாக முதல்வராகி- தமிழ்நாட்டின் நிர்வாகத்தைக் குட்டிச்சுவராக்கி விட்டுச் சென்ற பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 ஒன்றிய அரசின் சார்பில் இப்போது கூட உச்சநீதிமன்றத்தில் கடுமையாக எதிர்த்து, விடுதலை செய்யும் அதிகாரம் எங்களுக்குத்தான் இருக்கிறது என்று கூறியபோது பழனிசாமி தமிழ்நாட்டில் தானே இருந்தார். இவரும், இவர்போன்று திமுகவை விமர்சிக்கும் கத்துக்குட்டிகளும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து ஓர் அறிக்கையேனும் விட்டது உண்டா.

 ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலைக்காக இதயசுத்தியோடு பாடுபட்டார். தமிழ்நாடு அரசின் மூலமாக மூத்த சட்ட வழக்கறிஞர்களை வைத்து, அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும், பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் ஆணித்தரமாக வாதிட வைத்தார்.

அமைச்சரவை முடிவு எடுத்து 7 ஆண்டு அதிமுக ஆட்சியில் கிடைக்காத விடுதலை - திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் சாத்தியமாகி-சாதனையாகவும் மாறியிருக்கிறது. முதல்வரின் இந்த சாதனையைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சலில்-விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி 31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை-அதற்காகப் பாடுபட்ட திமுக அரசின் நடவடிக்கைகளைக் கேலிக்கூத்து என்று விமர்சிப்பது வெட்கக்கேடானது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் துளியும் பொருத்தமில்லாதது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: