480 பேருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்படும்: அமைச்சர் அன்பரசன் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஏரி ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட 480 பேருக்கு குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டபணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ஹிதேஷ்குமார், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ், மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்,ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்படாமல் உள்ளது. இந்த வீடுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 மாதத்தில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடுகள் ஒதுக்குவதில் உள்ள சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும். மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுபடி, ஆண்டுக்கு ₹3 லட்சம் வருவாய் உள்ள ஏழை, எளியோருக்கு வீடுகள் ஒதுக்கப்படும். இதுதவிர, சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் இருந்த 480 பேருக்கு மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட தைலாபுரத்தில் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

Related Stories: