சாதிக்கு ஒரு பதவி கேட்கும் தலைவர்கள்; 2 அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்?: ஓபிஎஸ், இபிஎஸ் இன்று முக்கிய முடிவு

சென்னை: தமிழகத்தில் 2 அதிமுக மாநிலங்களவை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்று ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் இன்று முக்கிய முடிவு எடுக்கிறார்கள். குறிப்பாக தென்மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கும் நிலையில், இன்று மாலை நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை பதவியிடங்களை நிரப்ப  இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரின் பதவிகளும் அடங்கும். அதாவது தமிழக  எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 எம்பி பதவியும், அதிமுகவுக்கு 2 எம்பி பதவியும் கிடைக்கும். இதில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதில் கடும் போட்டி நிலவியுள்ளது. எம்பி பதவியை பிடிக்க அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் மல்லுக்கட்டி வருகிறது. இதனால், யாரை வேட்பாளராக நிறுத்த போகிறார்கள் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி அறிவித்தார். அதன்படி, தி.மு.க. கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்று அக்கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் தற்போது எம்எல்ஏக்களாக கூட இல்லை. அதனால், எம்பி பதவி கேட்டு கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். சி.வி.சண்முகம் தனக்கு அல்லது தனது சகோதரர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். செம்மலை தனக்கு எம்எல்ஏ சீட் வழங்கவில்லை. அப்போதே எடப்பாடி வாக்குறுதி அளித்தார். அதன்படி தனக்கு சீட் வழங்க வேண்டும் என்கிறார்.

அதே நேரம், தொடர்ந்து வட மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலங்களுக்கு அதிமுகவில் சமீப காலமாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, தென்மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று தென்மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் கட்சி தலைமையிடமே பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அதனால், தற்போதுள்ள 2 மாநிலங்களவை எம்பி வேட்பாளர் பதவியை தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுப்பெற்று வருகிறது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இரு தலைவர்களும் இன்று சென்னையில் உள்ளனர். இவர்களை, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேரிலும், தொலைபேசி மூலமும் பேசி வருகிறார்கள். இதில், இன்று மாலைக்குள் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு பதவி நிச்சயமாக தென்மாவட்டத்துக்கு வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது.

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் யார்? என்று முடிவு எடுக்கப்பட்டால் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்கு வருவார்கள் என்றும், அப்போது வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி இருந்தால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, நாளை நடைபெறும் என்று தெரிகிறது. எப்படி இருந்தாலும், தமிழகத்தில் 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமை இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், அதிமுக பொதுக்குழுவை நடத்துவது குறித்தும் தலைமை இன்று முடிவு எடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: