வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திர காலம் 29ம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் வெயில் மற்றும் வெப்பம் கத்திரி வெயில் தொடங்கிய சில நாட்கள் நீடித்தது. இதற்கிடையே வங்கக் கடலில் அசானி புயல் உருவானதில் இருந்து வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நேற்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 150மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும், தெற்கு கேரளக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக இன்று மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை 22ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டமாக காணப்படும்.

நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு  வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். இது தவிர தென் கிழக்கு வங்கக் கடல் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். இத 22ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: