குற்றவாளிகள் கொலைகாரர்கள்... நிரபராதிகள் அல்ல...’ : பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து!!

சென்னை : பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  பேரறிவாளன் விடுதலை செய்தியை அறிந்து அவரது குடும்பத்தினர் ஆனந்த  கண்ணீர் சிந்தினர். அத்துடன், விடுதலைக்கு பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது. இந்த நீதியமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டத்தை நிகழ்த்தினால் நாம் எதோ ஒரு கட்டத்தில் வெற்றியடைய முடியும். 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி என்றார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஏற்றுக் கொள்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று கருத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: