31 ஆண்டுகாலம் ஒருவர் சிறையில் கழிக்க வேண்டும் என்பதை ஒரு விநாடி சிந்தித்தால் அந்த வலி அனைவருக்கும் புரியும் : அற்புதம் அம்மாள்

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று காலை விடுவித்தது. இதையடுத்து, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர். தாய், சகோதரி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு இனிப்புகளை ஊட்டி நெகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், மனிதபிமானத்தோடு போராடிய அனைவருக்கு நன்றி என்றார். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று குடும்பத்தோடு பேசி முடிவு செய்வோம் என்றும் குயில்தாசன் கூறினார்.இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், நாங்கள் பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டுகள் போராட்டம் நடத்தினோம்.போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 31 ஆண்டுகாலம் ஒருவர் சிறையில் கழிக்க வேண்டும் என்பதை ஒரு விநாடி சிந்தித்தால் அந்த வலி அனைவருக்கும் புரியும். பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பரோல் வழங்கியதால் எனது மகனின் உடல்நிலையை நான் நன்றாக கவனிக்க முடிந்தது. வலியும், வேதனையுமான 31 ஆண்டு கால சிறைவாசத்தை எனது மகன் கடந்து வந்துள்ளார்; எனது மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி,என்றார்.

Related Stories: