‘சாவில் சந்தேகம்’ என மனைவி புகார் 91 வயது விவசாயி சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: மருமகளுடன் கள்ளத்தொடர்பு குறித்து விசாரிக்க முடிவு

திருப்பத்தூர்: மனைவி புகாரின்பேரில் 91 வயது விவசாயியின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம், கருங்கல் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (91), விவசாயி. இவரது மனைவி கனகா. இவர்களுக்கு சண்முகம் உள்ளிட்ட 4 மகன்கள், ஒரு மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 1999ம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக ரங்கநாதனை பிரிந்த கனகா, பெங்களூருவில் உள்ள தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சண்முகத்தின் மனைவி வசந்திக்கும் ரங்கநாதனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த சண்முகம் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து சண்முகம் மனைவியை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக அரப்பாண்டகுப்பம் பகுதி விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் ரங்கநாதனும், வசந்தியும் குடும்பம் நடத்தியுள்ளனர். அப்போது சொத்தில் பாகம் பிரித்து தருமாறு ரங்கநாதனிடம் வசந்தி கேட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு சுமார் 1.50 ஏக்கர் நிலத்தை வசந்தி தனது பெயருக்கு மாற்றிக்கொண்டாராம். மீதமுள்ள நிலத்தையும் கேட்டு ரங்கநாதனிடம், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில் கடந்த 13ம்தேதி ரங்கநாதன் இறந்துவிட்டதால் அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள் சென்றுள்ளனர். அப்போது ரங்கநாதனின் கழுத்து, கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்ததாம். இதைப்பார்த்து சந்தேகமடைந்தவர்கள் வசந்தியிடம் கேட்டுள்ளனர். வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கனகா மற்றும் அவரது மகன்களை வசந்தி விரட்டி விட்டாராம். இதுகுறித்து கனகா, அம்பலூர் போலீஸ் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியரிடம் தனது கணவரின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து வட்டாட்சியர் சம்பத் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரங்கநாதனின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இதன் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மருமகளிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Related Stories: