கேரளாவுக்கு கொண்டு சென்ற 36 பசு மாடுகள் மீட்பு: வாகன சோதனையில் போலீசார் அதிரடி

திருச்சுழி: கமுதியில் இருந்து இறைச்சிக்காக கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 36 பசுக்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி போலீசார் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் 36 பசுமாடுகளை ஏற்றி வந்ததும், இந்த மாடுகள் அனைத்தும் கமுதியிலிருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதும், மாடுகளின் கண்களில் தூவ மிளகாய்பொடி கொண்டு செல்லப்பட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து 36 பசு மாடுகளையும் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட மாடுகள் எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் செல்வகுமார் மற்றும் மூர்த்தி, மாணிக்கம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு தண்ணீர், தீவனம் கொடுக்காமல் சித்ரவதை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: