நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு!!

நெல்லை: நெல்லை  அருகே கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை அருகே முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் கடந்த 14ம் தேதி நள்ளிரவில் சுமார் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத பாறை ஒன்று உடைந்து கல்குவாரிக்குள் விழுந்தது. பாறை இடுக்குகளில் 6 பேர் சிக்கினர்.

இதில் 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 17 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட டிரைவர் செல்வம், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்தார். இந்நிலையில் அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடர்  மீட்பு மேலாண்மை குழுவினர் 2 பிரிவாக பிரிந்து கல் குவாரியில் இறங்கி மீட்பு பணியை நேற்று காலை முதல் மேற்கொண்டனர்.அப்போது கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டார். 4வது நபராக மீட்கப்பட்ட லாரி கிளீனர் முருகன் நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குலத்தை சேர்ந்தவர்.கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்கனவே டிரைவர் செல்வம் இறந்த நிலையில், முருகன் , விஜய் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனிடையே குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார், ஒப்பந்ததாரர் சங்கரநாராயணன் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது  முன்னீர்பள்ளம் போலீசார் 3 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: