சேத்துப்பட்டு அருகே நிலத்தகராறில் பயங்கரம் தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாஜி ராணுவவீரர்

சென்னை: சேத்துப்பட்டு அருகே நிலத்தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த முன்னாள் ராணுவவீரரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மகன் ஜெகதீசன்(50) முன்னாள் ராணுவவீரர். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவருடைய தம்பி கோதண்டராமனுக்கு(38) திருமணம் ஆகவில்லை.

அண்ணன், தம்பி இடையே தந்தையின் 7 ஏக்கர் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோதண்டராமன் அவரது தாய் தேவகியுடன் தேவிகாபுரத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கரிப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கோதண்டராமன் சென்றுள்ளார். அப்போது அவருக்கும் ஜெகதீசனுக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன் துப்பாக்கியால், தம்பி கோதண்டராமனை மார்பில் சுட்டுள்ளார். இதில் அவர் அங்கேயே துடிதுடித்து பலியானார். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் அங்கு வந்தனர். உறவினர்கள் சடலத்தை ஒப்படைக்க மறுத்து விட்டனர். சொத்துக்காக தம்பியை கொலை செய்து விட்ட ஜெகதீசனுக்கு அந்த சொத்தை கொடுக்கக் கூடாது என்று கூறி  சடலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தாசில்தார் கோவிந்தராஜ் வந்து இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து முன்னாள் ராணுவீரர் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: