புத்துயிர் பெற்ற துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டம் அதிமுகவால் 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு

சென்னை: 10 ஆண்டுகளுக்கு பின்னர் புத்துயிர் பெற்ற துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அதிமுகவின் வீண் பிடிவாதத்தால் 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் வாகனங்கள் தற்போது மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு  இடையே வந்து செல்கின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும், சென்னை, எண்ணுார் துறைமுகங்களின் வருவாயை அதிகரிக்கவும், மதுரவாயலில் இருந்து துறைமுகத்திற்கு, பூந்தமல்லி  நெடுஞ்சாலையில் புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த தி.மு.க. ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சென்னை பறக்கும் சாலை திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த மேம்பாலத்திற்கு 2007ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டினார். இந்த உயர்மட்ட மேம்பால சாலைக்கான துாண்கள் கூவம் கரையை ஒட்டி அமைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ரூ.1,815 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்திற்கான பணிகள் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதற்காக கூவம் ஆற்றின் ஓரமாக 19.5 கிலோமீட்டருக்கு தூண்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில், 2011ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும் இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்தது.

இத்திட்டத்தில் சுமார் 14 கி.மீ. கூவம்  ஆற்றின் வழியே செல்கிறது எனக்கூறி இழுத்தடிப்பு செய்யப்பட்டது. இதனால் இந்த திட்டம் ஒரு கட்டத்தில்  கைவிடப்பட்டது. ஆனால், அதிமுக அரசு பல்வேறு காரணங்களை கூறி இந்த திட்டத்தை கைவிட்டாலும் இன்றுவரை கட்டப்பட்ட தூண்கள் மட்டும் கம்பீரமாக  காட்சியளிக்கிறது. இந்த பாலம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, 2020ம் ஆண்டு தமிழகம் வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இத்திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம்-மதுரவாயல் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்திற்கான புதிய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரவாயல் மேம்பாலம், இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். ஆனால், பாதியில் கைவிடப்பட்ட இத்திட்டத்தை கடந்த அதிமுக அரசு தொடங்காமல் விட்டது. கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. இந்த திட்டத்தில் சில இடங்களில் வாகனங்கள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் ஏற்ற வகையில் பாலங்களை கட்ட திருத்தங்கள் செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் அதிமுக அரசால் கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் தமிழக அரசு தொடங்க இருப்பதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5,855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.

திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு ரூ.1815 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மதிப்பு படி ரூ.5855 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக பணம் செலவிடப்பட உள்ளது. அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை முடித்திருக்கலாம். ஆனால், திமுகவுக்கும், அப்போதைய முதல்வர் கலைஞர் மற்றும் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கும் நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை அதிமுக அரசு முடக்கியது. அதிமுக ஆட்சியாளர்களின் வீண் பிடிவதத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானதோடு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு ரூ.1815 கோடிதான் ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் கைவிடப்பட்டதால், தற்போதைய மதிப்பு படி ரூ.5855 கோடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: