தனியார் மையங்கள் கொள்ளையடிக்கவே நுழைவுத்தேர்வுகள் உதவும்: கவர்னர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: சென்னைப் பல்கலைக் கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற பல்கலையின் இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பேசியதாவது:

அனைவரும் படிக்க வேண்டும் என்பதில் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் கொண்டுவந்துள்ள சாதனைத் திட்டம் தான் நான் முதல்வர் திட்டம். நீங்கள் படிக்கின்ற காலத்தில் பல்வேறு பயிற்சிகள் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கியதுதான் அந்த அடிப்படைத் திட்டம். நான் சில பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டபோது கூட தெரிவித்தேன், மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் இன்னும் அதிகமாக கல்வி வளரும் என்று கூறினேன்.

அந்த அடிப்படையில்தான் முதல்வரும், நானும் ஒன்றிய அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளோம். ஆளுநரிடமும் தெரிவித்துள்ளேன். குறிப்பாக இப்போது இளநிலை பட்டப்படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட அதற்கு ஒரு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று வைத்துள்ளனர். இது தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்க வசதியாக இருக்கும். அந்த அடிப்படையில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு அடிப்படையில் தான் அவர்களுக்கு கலைஅறிவியல் அல்லது மருத்துவம், பொறியியல் படிப்பாக  இருந்தாலும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் நமது திராவிட மாடல் என்று கூறுகிறோம். அதைத்தான் தமிழக முதல்வர் படிப்படியாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.  

மாணவர்களும், பெற்றோரும் இந்த கருத்தை ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பொறியியல் படிப்பில் தமிழில் படிக்கின்ற வசதியை கொண்டு வந்தது கலைஞர் ஆட்சியில் தான். அதைத்தொடர்ந்து எல்லா பல்கலைக் கழகங்களிலும் தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. வேலை வாய்ப்பு பெற வசதியாக தொழில்துறை, உயர்கல்வித்துறையையும் இணைத்து ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளார். அதனால் பாடத்திட்டமாக இருந்தாலும், பயிற்சி திட்டமாக இருந்தாலும்  அவையெல்லாம் மாற்றி அமைக்கப்படும். உயர்கல்வியில் இந்தியாவில் 53 சதவீதம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்று ஆளுநரே தெரிவித்துள்ளார். இவ்வாறுஅவர் பேசினார்.

Related Stories: