ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தமிழகத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழப்பு ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளித்ததால், இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய டெங்கு தடுப்புத் தினத்தையொட்டி புகைத்தெளிப்பான் இயந்திரங்கள் பொருத்திய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, தேசிய டெங்கு தடுப்பு தின உறுதிமொழியை ஏற்றனர்.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு, டெங்கு தடுப்புப் பணியில் பணியாற்றிய முன் களப்பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினர். இந்நிகழ்வில் திருவி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நல்வாழ்வுத்துறை சிறப்பு அலுவலர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், பொதுசுகாதாரம்  மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் மருத்துவர் ஆனந்த் குமார் அரசு அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

பின்னர், இது குறித்து  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நிருபர்களிடம் பேசியதாவது: டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் வகையிலும்,டெங்கு காய்ச்சல் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாடு முழுவதும் ‘தேசிய டெங்கு தடுப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக, 21,000 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணிகளை செய்து வருகின்றனர். வாகனத்தில் பொருத்தப்பட்ட புகை அடிப்பான்கள் 1,112, கையில் எடுத்துச்செல்லும் புகை அடிப்பான்கள் 7,087, சிறிய புகை அடிப்பான்கள் 7,654 மற்றும் டெமிபாஸ் 81,671 லிட்டர், பைரித்திரம் 75,716 லிட்டர், மாலத்தியான் 13.053 லிட்டர் போன்றவை கையிருப்பில் உள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய வட்டார சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் 2020ம் ஆண்டு டெங்குக் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் 42,311, என்கிற குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு 2,400 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. ஆனால்  முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2021ல் டெங்குக் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு 1,73,199 பரிசோதனைகள் செய்யப்பட்டு 6,039 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. 2022 ம் ஆண்டு 2 லட்சம் பரிசோதனைகள் இலக்கு நிர்ணயித்து 5 மாதங்களில் 66,747 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 2,485 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளித்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் உயிரிழப்பும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: