திருக்கோவிலூர் அருகே பயங்கரம் பள்ளி மாணவன் சரமாரி வெட்டி கொலை: சக மாணவர் கைது

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சக மாணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெங்களூரில் லாரி டிரைவராக உள்ளார். இவரது மகன் கோகுல் (17). திருக்கோவிலூர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோகுலுடன் படிக்கும் மற்றொரு மாணவர் டூவீலரில் அவரது வீட்டுக்கு வந்து, அவரை அழைத்து சென்றுள்ளார். வெகு நேரமாகியும் கோகுல் திரும்பி வராததால் தாயார் ஜெயபாரதி, செல்போனில் தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கோகுல் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் சென்று பார்த்த போது கோகுலின் ஒரு கை மணிக்கட்டு துண்டாகியும் தலை, கை, கழுத்து மற்றும் வயிறு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். சடலத்தின் மீது ஒரு வீச்சரிவாளும், பேனா கத்தியும் கிடந்தது. திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிந்து கோகுலின் சக மாணவனை கைது செய்தனர். அவரிடம்,தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோகுலின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தனிநபர் இக்கொலையை செய்திருக்க முடியாது. அவருடன் சிலர் சேர்ந்து இக்கொலையை செய்திருக்க வேண்டும் என்றும் அவர்களையும் கைது செய்ய கோரி நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

Related Stories: