மாநிலங்களவை எம்.பி தேர்தல் திமுக வேட்பாளர்கள் 3 பேர் அறிவிப்பு: தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் போட்டி; காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை பதவியிடங்களை நிரப்ப  இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

தற்போதைய எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 எம்பி பதவியும், அதிமுகவுக்கு 2 எம்பி பதவியும் கிடைக்கும். இதில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. எம்பி பதவியை பிடிக்க அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் மல்லுக்கட்டி வருகிறது. இதனால், யாரை வேட்பாளராக நிறுத்த போகிறார்கள் என்ற பரபரப்பு அதிமுக வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2022 ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 45 வயதான இவர் எம்.காம், டி.சி.எம். படித்துள்ளார். ராஜேஸ்குமார் 2020 முதல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியிலும் இருந்துள்ளார். ராஜேஸ்குமாருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் தான் மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை எம்.பி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.கல்யாணசுந்தரம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பம்பப்படையூரில் வசித்து வருகிறார். 81 வயதான இவர் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வருகிறார். கல்யாண சுந்தரம் 1986ல் கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர். 1997ல் மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவர். 2006ல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

அதே போல இரா.கிரிராஜன் சென்னை கொளத்தூரை சார்ந்தவர். இவர் திமுகவில் சட்டத்துறை செயலாளராக கடந்த 2015 முதல் இருந்து வருகிறார். 2009ல் சட்டத்துறை இணை செயலாளராகவும் பதவி வகித்தார். 2001 முதல் 2005 வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராவும் இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 6 மாதம் மண்டலகுழு தலைவராகவும் பதவி வகித்தார். 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். கிரிராஜனுக்கு மைதிலி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக சார்பில் களம் இறக்கப்படும் 2 பேர் என 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால், தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என தெரிகிறது.

* ப.சிதம்பரத்திற்கு எம்.பி பதவி?

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளர் தேர்வில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த தலைவரான ப.சிதம்பரத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளதால், தமிழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ப.சிதம்பரத்திற்கு வழங்க காங்கிரஸ் மேலிடம் முன்னுரிமை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: