லாட்டரியில் 62 லட்சம் இழந்த ஈரோடு தொழிலதிபர் தற்கொலை: நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ

ஈரோடு: தடை செய்யப்பட்ட லாட்டரி  தொழில் மூலம் ஈரோட்டை சேர்ந்த நபரிடம் ரூ.62 லட்சம் இழந்த தொழிலதிபர், இனியும் வாழ்ந்து பயனில்லை என்று வாட்ஸ்அப் வீடியோ பதிவிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு அடுத்துள்ள எல்லப்பாளையம், முல்லை நகரை  சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). இவரது மனைவி மாலதி (52). இவர்களுக்கு  திவ்யபாரதி, நித்யா ஆனந்தி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். திவ்யபாரதி கணவர்  இறந்துவிட்டதால் அவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நித்யாஆனந்தி  குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். ராதாகிருஷ்ணன் ஈரோட்டில்  தறிப்பட்டறை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் தறிப்பட்டறையை  மூடிவிட்டு கடந்த சில ஆண்டுகளாக நூல் கமிஷன் ஏஜென்டாக வேலை செய்துள்ளார். இதிலும் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லை.

இந்நிலையில் கருங்கல்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்ட சீட்டுகளை வாங்கினார். வாங்கிய சில நாட்களில் ஒரு குறிப்பிட்ட தொகை பரிசு விழுந்தது. இதனால் ராதாகிருஷ்ணனுக்கு லாட்டரி மீது மோகம் ஏற்பட்டது. தறிப்பட்டறை, நூல் வியாபாரத்தில் இழந்த பணத்தை பரிசு விழுந்தால் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது. இதனால் ரூ.62 லட்சம் வரை லாட்டரி வாங்கினார். ஆனால் அவருக்கு சொல்லும்படியாக பரிசு எதுவும் விழவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த ராதாகிருஷ்ணன் தொழில், வியாபாரம் மற்றும் லாட்டரி என்று எதுவும் கை கொடுக்கவில்லை என்று வேதனை அடைந்தார். லாட்டரி மோகத்தில் இருந்து மீளமுடியாமல் அவர் தவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்  மாலை வீட்டில் தனியாக இருந்த ராதாகிருஷ்ணன் செல்போனில் வாட்ஸ்  அப் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

அதில் அவர், கருங்கல்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற லாட்டரி வியாபாரியிடம்  ரூ.62 லட்சத்தை இழந்துவிட்டேன். இனியும் உயிருடன் இருந்தால்  அடிமையாகி மொத்தமாக அனைத்தையும் இழந்துவிடுவேன் என்பதால் தற்கொலை செய்து  கொள்ளப்போகிறேன். லாட்டரி வியாபாரி செந்தில்குமாரிடமிருந்து ரூ.30  லட்சத்தை நண்பர்கள் நஷ்ட ஈடாக வாங்கி கொடுக்க வேண்டும்.  எப்படியாவது  லாட்டரி தொழிலை ஒழித்துவிடுங்கள். பல குடும்பங்கள் காப்பாற்றப்படும் என பேசியிருந்தார். வாட்ஸ் அப் அனுப்பிய  சிறிது நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு ராதாகிருஷ்ணன் தற்கொலை  செய்து கொண்டார். தகவலறிந்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர். ராதாகிருஷ்ணன் வீடியோவில் கூறியதுபோல் கருங்கல்பாளையம் லாட்டரி வியாபாரி  செந்தில்குமாரிடம் விசாரணை நடக்கிறது.

Related Stories: