மாற்றுப்பாதை அமைக்காமல் 4 வழிப்பாதை பணிகளால் போக்குவரத்து நெரிசல்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் நான்கு வழி சாலைக்கான கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மாற்று சாலை அமைக்காததால் வாகனங்கள் நெரிசலில் சிக்கி வருகின்றன.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தொழில்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிபாளையத்திலிருந்து தோக்கவாடி வரை நான்கு வழி பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காகித ஆலை காலனி அருகே தற்போதுள்ள குறுகலான பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகளில் தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பாலம் கட்டும் இடத்தை வாகனங்கள் கடக்க, மாற்று சாலை அமைக்கவில்லை.

சர்வீஸ் சாலை அமைக்காமல் கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே குறுகலான வழி ஒதுக்கப்பட்டுள்ளது. திடமில்லாத இந்த பாதையில் செல்லும் வாகனங்கள் புதைந்து சேற்றில் சிக்கி தடுமாறுகின்றன.

நேற்று இரவு பெய்த மழையால் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. காலையில் இவ்வழியாக சென்ற பள்ளி, கல்லூரி பேருந்துகள் சேற்றில் சிக்கியதால் வெளியேறுவதில் தாமதமானது. டூவீலர்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காலை, மாலை நேரங்களில் நாள்தோறும் இதுபோன்றே நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட வேண்டியுள்ளது. வாகன நெரிசலை குறைக்க இங்கு தரமான மாற்று சாலையை ஒப்பந்ததாரர் அமைத்து கொடுத்து பொதுமக்களின் சிரமத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: