புதுச்சேரியில் 5.1 செ.மீ. மழை பூமியான்பேட்டில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

புதுச்சேரி :   புதுச்சேரியில் நகரப் பகுதி மற்றும் கிராமப்புறங்களில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. வங்கக்  கடலில் உருவான அசானி புயல் ஆந்திராவில் மசூலிப்பட்டினம் அருகே கரையை  கடந்து நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது. இதனால் வட  தமிழகம், புதுவையில் 3 மணிநேரம் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

 அதன்படி நள்ளிரவு 11.30  மணி முதல் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. நகரப்  பகுதியான முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை, உருளையன்பேட்டை  பகுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதுதவிர கிராமப்புறங்களான  வில்லியனூர், தவளக்குப்பம், மங்கலம், அபிஷேகப்பாக்கம்,  திருக்கனூர் உள்ளிட்ட  பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக பெய்த அடை மழையால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து ரோட்டில்  விழுந்து மின் தடை ஏற்பட்டது.

 அவற்றை மின்துறை ஊழியர்கள், தீயணைப்புத்  துறையினர் உடனடியாக சரி செய்தனர். தொடர்ந்து விடியவிடிய  சாரல் மழை நீடித்த நிலையில் தொடர்ந்து ேநற்றும் வானம் மப்பும் மந்தாரமுமாக  காணப்பட்டது. உழவர்கரை பூமியான்பேட்டை, குடியிருப்பு பகுதியில் இரவு பெய்த  கனமழையால் வீட்டின் சிமெண்ட் சிலாப் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேற்கூரை  சிமெண்ட் ஷீட்டும் உடைந்து நொறுங்கின. இருப்பினும் அங்கு ஆள்நடமாட்டம்  இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதியில் குட்டைபோல்  மழைநீர் தேங்கி நின்றது.

 கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 5.1  செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அக்னி நட்சத்திரம் கடந்த 4ம்தேதி துவங்கிய  நிலையில் ஒரு வாரம் கடுமையாக வெயில் இருந்தது. ஒருமணிநேர கனமழையால் பூமி  குளிர்ந்து குளிர்காற்றுடன் இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்தனர். கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படும் நிலையில்  வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக கட்டுமர மீனவர்கள் பெரும்பாலானோர்  கடலுக்கு செல்லவில்லை. கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா  பயணிகள் இறங்கி குளிக்காமல் தடுப்பதற்காக காவல்துறையினரும் ரோந்துப்  பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: