ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 10 ஆண்டு சாதனையை சாதித்து காட்டியிருக்கிறோம்: தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மகன் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 10 ஆண்டு சாதனைகளை நிறைவேற்றி உள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா-நித்ய கல்யாணி ஆகியோரின் மகன்  ஆர்.நெல்சன் மண்டேலா, அ.பாலகுமார் - மனோகரி ஆகியோரின் மகள் பா.அபிராமி  ஆகியோரின் திருமணம் திருவான்மியூரில் நேற்று நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின் தலைமையேற்று மண விழாவினை நடத்தி வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கக்கூடிய ராஜாவுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.       

நம்முடைய திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது, சாதனைகள் மட்டுமல்ல, ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த சோதனைகளுக்கும் முடிவு கட்டியிருக்கிறோம். அதேபோல சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றைக்கு நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம். அது இல்லம் தேடிக் கல்வியாக இருந்தாலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற அந்தத் திட்டமாக இருந்தாலும், ஏறக்குறைய 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கக்கூடிய அந்தப் பணிகளாக இருந்தாலும், தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை சொன்னோமோ, அந்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, சொல்லாத பல வாக்குறுதிகளையும் செய்து முடித்திருக்கக்கூடிய ஆட்சி தான் திமுக ஆட்சி.

நாம் தேர்தல் அறிக்கை வெளியிட்டது மட்டுமல்ல,  இந்த ஓராண்டு காலத்தில் என்னென்ன செய்து முடித்திருக்கிறோம் என்பதையும் புத்தகமாக வெளியிட்டு மக்களிடத்தில் எடுத்துச் சொல்லக்கூடிய அளவிற்கு பல காரியங்களை நாம் செய்து முடித்திருக்கிறோம்.  

நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய, ஒரு அளப்பறிய சாதனை என்னவென்று சொன்னால், மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை. இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக்கூடிய அளவிற்கு திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலைக்குப் போகக்கூடிய பெண்களின் அன்றாடச் செலவில் பெரும் சுமையை நாம் குறைத்து இருக்கிறோம்.

நாங்கள் போட்ட கையெழுத்தின் காரணமாக எத்தனை கோடி மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று சட்டமன்றத்தில் நான் புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சிதான் நம்முடைய ஆட்சி, திமுக ஆட்சியாக இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். திருமண விழாவில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி,  சக்கரபாணி, சா.மு.நாசர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்  தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெகத்ரட்சகன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, திராவிட இயக்க  தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆனந்தகிருஷ்ணன், மேயர்கள்  வசந்தகுமாரி, மகாலட்சுமி, துணை மேயர்கள் மகேஷ்குமார், கோ.காமராஜ், மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை,  நியமன குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், ரசல் பவுண்டேஷன் ரசலையன், வழக்கறிஞர் கே.ரமேஷ்  பாபு, தாம்பரம் எஸ்.ராஜசேகர், மீனாள் அன் கோ சகாதேவன், கோகுல்நாத், பாண்டி  கணபதி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் டிஜிபி சைலேந்திரபாபு, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: