தக்காளி விலை கிடு கிடு உயர்வு ஒரே மாதத்தில் ரூ.40 எகிறியது

திருச்சி : திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. நேற்று காலை 300 டன் காய்கறிகள் வந்தன. ஏப்ரல் மாத துவக்கத்தில் ரூ.10க்கு விற்ற தக்காளி, வெயிலின் தாக்கத்தால் மாத இறுதியில் ரூ.40ஆக உயர்ந்தது. இது மே 1 முதல் ரூ.50ஆக அதிகரித்தது. நேற்று வரை இதே விலை நீடித்தது.

வழக்கமாக தக்காளி ரூ.10 முதல் 15 வரை விற்கும். இப்போது வெயில் காரணமாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்து விட்டது. ஆந்திராவில் இருந்து மட்டுமே காந்தி மார்க்கெட்டுக்கு தக்காளி வருகிறது. இதன் காரணமாக விலை குறையாமல் ரூ.50 அளவில் விற்கப்படுகிறது. மேலும் சில்லறை கடைகளில் கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் கூறுகையில், ‘வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளால் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நாட்டுத்தக்காளி வரத்து முற்றிலும் இல்லை. தற்போது ஆந்திரா மாநிலத்திலிருந்து மட்டும் தக்காளி வருகிறது. இதனால் தக்காளி விலை குறையவில்லை. மாறாக விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories: