இலங்கைக்கு திமுக எம்எல்ஏக்கள் ரூ.1.30 கோடி நிதி உதவி: முதல்வரிடம் அரசு கொறடா வழங்கினார்

சென்னை: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக எம்.எல்.ஏக்கள் சார்பில் ரூ.1.30 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அரசு கொறடா கோவி.செழியன் வழங்கினார். இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான அனுமதி ஒன்றிய அரசிடம் கிடைத்ததை தொடர்ந்து, பல்வேறு நபர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் நிதி உதவியை வழங்கி வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மற்றும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம் தேதி தெரிவித்தார். இதேபோல், திமுக பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இந்தநிலையில், இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.எல்.ஏக்கள், தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கிடும் வகையில், தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் சந்தித்து அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.1 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினர். அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: